SAINA
வுஹான்,
ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா, சிந்து ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினார்கள். காஷ்யப் தோல்வி கண்டு வெளியேறினார்.
கால் இறுதியில் சாய்னா
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி சீனாவின் வுஹான் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹராவை சந்தித்தார்.
67 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் சாய்னா நேவால் 21-14, 10-21, 21-10 என்ற செட் கணக்கில் நோஜோமியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் சாய்னா, சீன தைபேயின் சு யிங் தாய்யை எதிர்கொள்கிறார்.
சிந்து அபார வெற்றி
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக போட்டியில் இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய இளம் வீராங்கனை பி.வி.சிந்து 21-8, 21-9 என்ற நேர்செட்டில் மக்காவ் வீராங்கனை டெங் லோக் யுவை எளிதில் விரட்டியடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 20 நிமிடமே தேவைப்பட்டது. சிந்து கால் இறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான சீன வீராங்கனை லி சூய்ருய்யை சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீரர் காஷ்யப் 23-21, 17-21, 8-21 என்ற செட் கணக்கில் சீன வீரர் சென்மிங் வாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
இந்திய ஜோடிகள் தோல்வி
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அருண் விஷ்ணு-அபர்ணா பாலன் ஜோடியும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடியும் தோல்வி கண்டு நடையை கட்டியது.
Comments
Post a Comment