C S K
சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில், சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 5 வெற்றிகளுடன் ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 4 தோல்விகளோடு பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை நிர்ணயித்த 193 ரன்களை விரட்டிய பஞ்சாப் அணி முதல் ஓவரிலேயே சேவாக் விக்கெட்டை இழந்தது. மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் சிறிது நம்பிக்கயளித்தாலும், அடுத்தடுத்து, மார்ஷ், பெய்லி, மில்லர் என ஆட்டமிழக்க 9 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை மட்டுமே பஞ்சாப் சேர்த்தது.
சிறப்பாக ஆடிவந்த விஜய் 10-வது ஓவரில் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டம் மொத்தமாக சென்னையின் பிடிக்கு வந்தது. தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 95 ரன்களை மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. ரவீந்த்ர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் நேரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல, ஸ்மித், மெக்கல்லம் ஜோடி, அதிரடியான துவக்கத்தைத் தந்தனர். ஸ்மித் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் மெக்கல்லம் தனது விளாசலை நிறுத்தவில்லை. ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்து 66 ரன்களை அவர் குவித்தார். 32 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் மெக்கல்லம் அரை சதம் தொட்டார்.
13-வது ஓவரில் அக்ஷர் படேல் வீசிய பந்தில் மெக்கல்லம் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து தோனி களமிறங்கி, ரெய்னாவுக்கு ஈடுகொடுத்து ரன் சேர்க்கத் துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக 16-வது ஓவரில் ரெய்னா 29 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கி கேப்டனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் வேலையைத் தொடர்ந்தார்.
மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காத சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைக் குவித்தது. தோனி 27 பந்துகளில் 41 ரன்களுடனும், ஜடேஜா 11 பந்துகளில் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் 'கை தவறிய' வாய்ப்புகள்
சென்னை ஆடிய போது 5-வது ஓவரில் மெக்கல்லம் தந்த கேட்சை மிட்சல் ஜான்சன் தவறவிட்டார். அப்போது மெக்கல்லம் 23 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து 11-வது ஓவரில், அக்ஷர் படேல் வீசிய பந்தை ரெய்னா சிக்ஸருக்கு அடிக்க முயல, பவுண்டரிக்கு அருகில் ஓடி வந்த மிட்சல் ஜான்சன், மீண்டும் ஒரு கேட்ச்சை நழுவவிட்டார்.
Comments
Post a Comment