kankaroo
சர்ச்சைகளுக்குப் பேர்போன இயக்குநர் சாமி இந்த முறை அண்ணன் - தங்கை பாசத்தைக் கையாண்டிருக்கிறார். அண்ணன் - தங்கை பாசத்தைப் பல கோணங்களில் அணுகிய தமிழ் சினிமாவில் ‘கங்காரு’ வின் பாசம் எப்படி எனப் பார்க்கலாம்.
ஒரு வயதுத் தங்கையை மார்போடு அணைத்துக்கொண்டு அந்த மலையூருக்கு வந்து சேர்கிறான் பத்து வயது முருகேசன். அம்மா, அப்பாவை இழந்து நிராதரவாக நிற்கும் அவனுக்கு ஒரே பிடிமானம் தங்கை அழகு (ஸ்ரீ பிரியங்கா). இவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் அந்த ஊரின் சிறு வணிகர் கருப்பசாமி (தம்பி ரமைய்யா), தங்கையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் பாசத்தைப் பார்த்து அவனை ‘கங்காரு’ என அழைக்க ஆரம்பிக்கிறார். ஊரும் அதையே பிடித்துக் கொள்கிறது. அண்ணனும் தங்கையும் வளர்ந்து ஆளாகிறார்கள்.
தங்கை ஒருவனைக் காதலிக்கிறாள். அவனை மணம் முடிக்க நினைக்கும் போது அவன் மர்மமாக இறந்துபோகிறான்.ஒரு இடைவெளிக்குப் பிறகு மற்றொரு மாப்பிள்ளையைப் பேசி முடிக்கிறார்கள். அவனுக்கும் அகால மரணம் சம்பவிக்கிறது. அதற்கு மேலும் அந்த ஊரில் அவர்கள் வசிப்பது நல்லதல்ல என எண்ணும் விஸ்வநாதன் (ஆர். சுந்தரராஜன்) பக்கத்திலிருக்கும் தனது ஊருக்கு அண்ணன்–தங்கையை அழைத்துச் செல்கிறார்.
ஆதரவு கொடுத்த உரிமையில் தனது உறவுக்காரப் பையனுக்கு முருகேசனின் தங்கையைத் திருமணம் செய்துவைக்கிறார். இம்முறை அவளது கணவனை அடையாளம் தெரியாத நபர் தாக்கிக் கொல்ல முயற்சிக்கிறார். அழகுவைத் திருமணம் செய்துகொள்ள இருந்தவர்கள் அடுத்தடுத்து இறந்துபோனதன் பின்னணியைக் கிளற ஆரம்பிக்கிறது காவல்துறை. அழகுவின் வாழ்க்கையில் விளையாடியது யார் என்று துப்பு துலங்கியதா என்பதுதான் கங்காருவின் கதை.
‘அசைவ’க் காட்சிகளோ இரு பொருள் வசனங்களோ இல்லாமல் படத்தை இயக்கியதற்காகவே இயக்குநர் சாமியைப் பாராட்ட வேண்டும். ஆனால் திரைக்கதை பின்னிய விதத்தில் பெரும் சறுக்கல். முதல் பாதியில் புதுமையோ சுவாரஸ்யமோ இல்லாத தங்கையின் காதலும், தம்பி ராமையா - கருப்பு கூட்டணியின் வறண்ட நகைச்சுவையும் கழுத்தை அறுக்கின்றன.
இரண்டாம் பாதியோ அதற்கு நேர் மாறாகப் பரபரவென்று நகர்கிறது. அதற்குக் காரணம், கதையின் மையமாக இருக்கும் ப்ளாஷ்பேக் கதையும், காவல் ஆய்வாளர் சாமியின் விறுவிறு புலன் விசாரணையும். ப்ளாஷ் பேக் காட்சியில் முருகேசனின் தங்கையான அழகு அவனது உடன்பிறந்த சகோதரியா என்பதில் இயக்குநர் வைத்த திருப்பம் நெகிழ வைக்கிறது.
அதீத பாசம் எந்த எல்லைக்கும் பயணிக்கும் என்ற இயக்குநரின் பார்வையும், அது மனப் பிறழ்வாக மாறுவதை எளிமையாக விளக்கியதும் நச்சென்று இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான காட்சிகள் நாடகத் தன்மையுடன் கச்சாவாகச் சித்தரிக்கப்பட்டிருப் பது காட்சியுடன் ஒன்றவிடாமல் தடுக்கிறது.
‘கங்காரு’ முருகேசனாக நடித்திருக்கும் அர்ஜுனா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் எல்லாக் காட்சி களிலும் முறுக்கிக் கொண்டு திரிவது ஒரு கட்டத்தில் மிகை நடிப்பாக மாறிவிடுகிறது. முருகேசனின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்ரீ பிரியங்கா தவிப்பான தங்கையாக நடிப்பில் கவர்கிறார், காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் இயக்குநர் சாமியும் அலட்டல் இல்லாமல் தன் அடையாளத்தைப் பதிக்கிறார். வர்ஷா படத்தின் வசீகரத்தைக் கூட்டப் பயன்பட்டிருக்கிறார்.
படத்தில் தனித்துத் தெரியும் அம்சம் பாடகர் ஸ்ரீனிவாசின் இசை. எல்லா பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன. ஸ்வேதா மேனன் பாடியிருக்கும் ‘பேஞ்சாக்க மழைத்துளியோ மண்ணோடு’ என்று தொடங்கும் பாடலின் இசையும் வைரமுத்துவின் வரிகளும் அதைப் புதிய காதல் கீதமாக ஒலிக்க வைக்கின்றன. இந்தப் பாடலைப் படமாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் ராஜரத்னம் கவர்கிறார்.
இரண்டாம் பாதியில் திரைக்கதையில் காட்டியிருந்த வேகத்தை முதல் பாதிக்கும் கொடுத்திருந்தால் கங்காருவின் பாய்ச்சல் இன்னும் வேகமாக இருந்திருக்கும்.
Comments
Post a Comment