sandakozhi movie
விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில்
விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சண்டகோழி2 ‘ 2005 வெளியாகி ஹிட்டடித்த ‘சண்டகோழி‘ படத்தின் இரண்டாம் பாகம். படித்துவிட்டு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு வரும் பாலு(விஷால்), சுற்றுவட்டார ஊர்களுக்கெல்லாம் பெரிய ஐயாவாக துரை ஐயா(ராஜ் கிரண்). ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பிரச்னையால் ஊருக்குள் திருவிழா இல்லாமல் , மழை தண்ணி இல்லாமல் ஊரே காத்துகிடக்க. இந்த வருடமாவது நடத்தலாம் என திருவிழாவுக்கான திட்டம் போடுகிறார்கள் ஊர் பெரியவர்கள். ஆனால் பிரச்னைக்குக் காரணமான குடும்பமோ நீங்கள் என்ன சொன்னாலும் எங்கள் பழியைத் தீர்ப்போம் என வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறது.
இதனால் எவ்வித பிரச்னையும் இல்லாமல் திருவிழாவை நடத்தி முடிக்க பாலுவும், துரை ஐயாவும் முடிவு செய்து களத்தில் இறங்குகிறார்கள். யாரை இவர்கள் பழி தீர்க்க நினைக்கிறார்கள், ஏன், முடிவு என்ன என்பது மீதிக் கதை. முதல் பாகம் வந்து 13 வருடங்கள் கழித்து இந்த பாகம் வெளியானாலும் அத்தனை நடிகர்களையும் ஒன்றிணைத்து இயக்கிய லிங்குசாமிக்கு பாராட்டுகள்.பழைய ஹீரோயினுக்கு மெனெக்கெடாமல் ஒருவரியில் கதை சொல்லி கீர்த்தி சுரேஷை நாயகியாகக் கொண்டு வந்தது புத்திசாலித்தனம். சமீபகாலமாகவே விஷால் இயக்குநரின் பேச்சைக் கேட்டு கதைக்கு என்னத் தேவையோ அதை மட்டும் செய்கிறார்.
அந்த வகையில் இதிலும் அதே பழைய எதார்த்த பக்கத்து விட்டு பையனின் சாயல், ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான நடிப்பு, சில பில்டப்கள் இருப்பினும் அதைக் கண்டுகொள்ளாமல் அசால்ட்டாக கடந்து செல்வது என விஷாலின் நடிப்பில் நிறைய முன்னேற்றம். கீர்த்தி சுரேஷ், அழகாக இருக்கிறார், அசத்தலாக நடனம் ஆடுகிறார். எனினும் குறும்பான காட்சிகளில் கொஞ்சம் தூக்கலான நடிப்பு. இது கொஞ்சம் டூ மச்‘ஆ இருக்கோ எனத் தோன்றுகிறது. ஆங்காங்கே ‘தேவர் மகன்‘ ஞாபகம் வந்தாலும் கமர்சியல் ஆக்ஷன் காட்சிகளும், கிராமத்து திருவிழா சம்பிரதாயங்களும் சற்றே படத்தின் போக்கை டைவர்ட் செய்துவிடுகிறது.
‘தாவணி போட்ட தீபாவளி‘, ‘முண்டாசு சூரியனே‘ போன்ற மியூசிக் மேஜிக்குகள் நடக்கவில்லை , ஆனால் யுவனின் ‘கம்பத்துப் பொண்ணு‘ பாடல் ரீங்காரம். பின்னணி இசை சரவெடி. செம்மண் காட்டு சண்டைக் காட்சிகள், கலர்புல் திருவிழா சம்பவங்கள் , கிராமத்து இயற்கை என அத்தனையும் அம்சமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல். ராஜ்கிரணுக்கு ஏன் இவ்வளவு பெரிய பில்டப் எனத் தெரியவில்லை. ’திருவிழாவுல புலி வேஷம் போடலாம், ஆனால் புலிக்கு முன்னாடியே வேஷம் போடக் கூடாது’, ‘அறுவாளப் பார்த்தா ஆடு பயப்படும், ஐயாளு எதுக்குப் பயப்படணும்’. இப்படி படம் நெடுக பன்ச் டயலாக்குகள் இருப்பினும் பறந்து அடிப்பது, மேலே பறப்பது போன்ற காட்சிகள் இல்லாமல் போரடிக்காத கமர்சியல் படமாக கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.
Comments
Post a Comment