ஜோக்கர் - விமர்சனம்
அதிகார மையங்களை எளிய மனிதனால் எப்படி தட்டிக் கேட்க முடியும்? அதனால் தன்னையே ஜனாதிபதியாக கருதிக் கொள்ளும் மனநிலை படைத்தவராக மாறுகிறார். ஜோக்கராக பாவித்துக் கொண்டு மன்னர் மன்னன் எழுப்பும் கேள்விகள், ஒவ்வொன்றும் சம்மட்டி அடிகள்.
அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டம், அதிகாரிகளின் ெமத்தனம், மணல் கொள்ளை, கால் ஒடிந்த ஆட்டுக்கு நஷ்ட ஈடு, ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தைக்கு நீதி கேட்பது என பல பிரச்னைகளை தொட்டுச் செல்கிறது படம். மன்னர் மன்னன் வைக்கும் கோரிக்கைகளும், கேள்விகளும் பதில் சொல்ல முடியாதவையாக இருக்கிறது. தன் மனைவியை கருணை கொலை செய்ய அனுமதி கோரும் மனுவை நிராகரித்த நீதிமன்றத்தின் முன், ‘கழிப்பறை கட்டித்தர வக்கில்லாத அரசிடம் கருணையை எதிர்பார்த்தது என் தவறுதான்’ என்று அவர் முழங்குவது உலுக்கி எடுக்கிறது.
மன்னர் மன்னனாக குரு சோம சுந்தரம் வாழ்ந்திருக்கிறார். ஒரு எளிய மனிதனின் காதலை நுணுக்கமாக வெளிப்படுத்துவது, தன்னை ஜனாதிபதியாக கருதிக்கொண்டு மிடுக்காக நடப்பது, அதிகாரத் தோரணையில் ஆணையிடுவது என இதுவரை இல்லாத புதிய கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்.
மன்னர் மன்னனின் அரசியல் ஆலோசகராக வரும் மு.ராசாமியும், உதவியாளராக வரும் காயத்ரி கிருஷ்ணனும் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். சினம் கொண்ட கிழட்டு சிங்கமாக மு.ராமசாமி கொதிக்கிறார். கிளை மாக்சில் ‘என்ன பண்றது ஏதாவது செய்யலைன்னா தூக்கம் வரமாட்டேங்குது. எல்லா அநியாயத்ைதயும் வேடிக்கை பார்த்து கடந்துபோக முடியலை’ என்று புலம்புகிற காட்சியில் நெகிழ வைக்கிறார்.
ரம்யா பாண்டியன் நடிப்பில் அப்படி ஒரு முதிர்ச்சி. மண்டைக்குள்ள கலவரம் வந்தால் கட்டிங் போடும் கருத்து கந்தசாமியாக பவா.செல்லத்துரை கச்சிதம். செழியனின் ஒளிப்பதிவு கதையை நேரடி நிகழ்வாக மாற்றிக் காட்டுகிறது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்க வைக்கின்றன.
வேடிக்கை பார்க்கும் மக்கள், ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கம் இரண்டின் மீதும் சமமான பார்வையுடன் ஒரு படத்தை தந்திருக்கிறார் ராஜு முருகன். பெரும்பாலான காட்சிகளில் கருத்து திணிப்பு இருப்பதால் நாடகத் தன்மை வந்து விடுகிறது. ஒரு கிராமத்துக்கு ஜனாதிபதி வந்து செல்வது பெரிய நிகழ்வு. அதை மிகச்சாதாரணமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் ‘ஜோக்கர்’ சீரியசாக பார்க்கப்பட வேண்டியவன். -தினகரன் விமர்சனக்குழு.
Comments
Post a Comment